Wednesday, 16 December 2009
19:09
நேபாள தலைநகர் காத்மாண்டுவை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள மாவோயிஸ்டுகள், அதனை சுயாட்சி பிராந்தியம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நேபாளத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஏற்கனவே நிழல் அரசுகளை அமைத்துவிட்டதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்த நிலையில், தற்போது தலைநகர் காத்மாண்டுவையும் கைப்பற்றி அதனை புதிய சுயாட்சி கொண்ட பிராந்தியமாக ஆக்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.
இலங்கையில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டனின் அயலுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனைத்து மனிதாபிமான அமைப்புகளும் சென்று வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
Tuesday, 15 December 2009
10:07
யுத்த விடயங்கள் உட்பட நாட்டின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடி தொலைக் காட்சி விவாதமொன்றுக்குத் தான் தயாராக இருப்பதாக எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி.ஆகியவற்றின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஜெய்க்ஹில்டனில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமர சிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் எதிரணிகள் மீது சேறு பூசும் கலாசாரத்தைக் கைவிட்டு உண்மையை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முன்வருமாறு கோரிக்கை விடுத்தார்.
சரணடைந்த புலிகளின் தலைவர்களைக் கொல்லுமாறு அரசாங்கமோ அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவோ ஒருபோதும் உத்தரவிட்டிருக்கவில்லை என்று திட்டவட்டமாக நிராகரித்துள்ள அரசு எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா இது தொடர்பாகத் தெரிவித்திருந்தமைக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளது.
வடக்கில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களான புலித்தேவன், நடேசன்,ரமேஷ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை துரோகத் தனமானதெனக் கூறி முற்றாக மறுத்திருக்கும் அரசாங்கம், இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்
அமெரிக்காவும், ரஷ்யாவும் தாங்கள் இருப்பு வைத்துள்ள அணு ஆயுதங்களில் தலா 500 எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என ஆஸ்ட்ரேலியாவும், ஜப்பானும் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள அணு ஆயுதங்களில் 90 விழுக்காட்டை குறைக்க வேண்டும் என்றும் அவ்விரு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன.
அணு ஆயுத ஒழிப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பாக ஆஸ்ட்ரேலியா - ஜப்பான் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 22,000 முதல் 23,000 எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளதாகவும், இவற்றில் தலா 500 அணு ஆயுதங்களையாவது இரு நாடுகளும் குறைக்க வேண்டும் என அதில் இரு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.
மேலும் இந்தியா உள்பட அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இதர நாடுகளும் தங்களது அணு ஆயுத எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்றும் அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை தொடர்ந்து வைத்திருப்பதினால் ஏற்படும் பலன்களை விட ஆபத்துக்களே அதிகம் உள்ளதால், அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்திடும் தீவிர முயற்சியாகவே இந்த முக்கியமான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் கேரத் ஏவன்ஸ் கூறினார்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தனித்துப் போட்டியிடுகிறார்.
அதிபர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வைப்புப் பணத்தை தேர்தல் செயலகத்தில் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்ததை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜோன் ஹோமஸ், சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைவதற்கு விரும்புவதாக ஐ.நா. சபைக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், அது குறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தியதாகவும் ஜோன் ஹோமஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் பாதுகாப்பான முறையில் சரணடைவதை தம்மால் உறுதிப்படுத்த முடியாமல்போனதாகவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் ஐ.நா. அதிகாரிகள் யுத்த பிரதேசத்தில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சரணடைய விரும்பியவர்கள் பின்னர் உயிரிழந்து விட்டதாக ஊடகங்கள் மூலமாகத்தான் தாம் அறிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் அவர்கள் எவ்வாறு கொல்லப்பாட்டர்கள் என்பது குறித்தோ அவர்களை யார் படுகொலை செய்தார்கள்; எவ்வாறு அந்த சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்தோ ஐ.நா. சபைக்கு தெரியாது என்றும் ஜோன் ஹோமஸ் தெரிவித்துள்ளார்
இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விடியோக் காட்சிகள் மோசடி செய்யப்பட்டவை அல்ல என்று 'டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட விடியோக் காட்சிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது.
முன்னதாக குறிப்பிட்ட அந்த விடியோக் காட்சிகள் போலியானவை என்றும், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்ட விடியோ காட்சிகள் தொடர்பாக, 'கிரான் பெரடரிக்' என்ற விடியோக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் கிரான், குறிப்பிட்ட விடியோ காட்சிகளில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த விடியோ காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்தக் காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும், துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சுடப்ட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும், விடியோ மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடியோ காட்சியானது நோக்கியா செல்போன் மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக அந்த விடியோ காட்சிகள் நூறு சதவீதம் உண்மையானது என்றும், இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் மாற்றுக் கருத்துகள் இன்றி நிஜமாகவே இடம்பெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக 'டைம்ஸ்' ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
'டைம்ஸ்' ஏட்டின் இந்த உறுதிப்படுத்துதலானது, இலங்கை அரசின் மீதான யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கான சர்வதேச குரலை மேலும் வலுப்படுத்தும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பேரிலேயே, இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை, அந்தப் பதவியிலிருந்து அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியேற்றியதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் 'நேசன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாதக சூழ்நிலைகள் தோன்றியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவின் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றுமாறு மன்மோகன் சிங்,ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையிலேயே பொன்சேகா பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவும் அப்பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து பொன்சேகா, இலங்கை இராணுவத்தினர் மத்தியில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்ததாகவும், இந்த நிலையானது இலங்கையில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்தி விடும் என்று கொழும்பில் உள்ள 'ரா' அதிகாரிகள் மூலம் இந்திய பிரதமருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை போன்று இலங்கையிலும் இராணுவ ஆட்சி ஏற்படலாம் என்று மன்மோகன் சிங், ராஜபக்சவை எச்சரித்துள்ளார்.
மேலும் இராணுவத்தின் உயர் நிலை தளபதிகளை உடனடியாக இடமாற்றுமாறும், அதிகளவு பலம் பொருந்தியவராக மாறியுள்ள பொன்சோகவிற்கு அதிகாரங்கள் அற்ற பதவி ஒன்றை வழங்குமாறும் மன்மோகன் சிங், அப்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் யுத்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரது உத்தரவுகள் பலவற்றை நிறைவேற்ற பொன்சேகா தவறியதாகவும், அந்த உத்தரவுகள் இந்தியாவின் ஆலோசனையின் பேரிலேயே பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொன்சேகாவின் இந்த தன்னிச்சையான செயல்பாடுகளால்தான் யுத்த களத்தில் இந்தியா விரும்பிய சில முக்கிய நிகழ்வுகள் இடம்பெறாமல் போய்விட்டதாகவும், அதனால் பொன்சேகா மீது இந்தியாவிற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Monday, 14 December 2009
18:37
ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில் விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக அவசரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் 35 தொன் ஆயுதங்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.
சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டநடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாகவும், தெற்கு வசீரிஸ்தான் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தெற்கு வசீரிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கியது. இதில் 30 ஆயிரம் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
''இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்தால் தமிழர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்போம;'' என்று முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூறினார்.
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே நேற்று மாலை கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள்,டெல்லி செல்லும் நீங்கள் யாரை சந்திக்க உள்ளீர்கள் என்று கேட்டனர்
இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டுப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்குதலில் பிரதமரின் பல் உடைந்துள்ளது.
இத்தாலியில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள மண்டல தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், விடுதலை மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் பெர்லுஸ்கோனி நேற்று மாலை பங்கேற்றார்.
மீண்டும் தமது ஆட்சி நீடிக்குமானால் அதிபர் மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் தமிழருக்கான அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை அரசு, இந்தியாவிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மஹிந்த சகோதரர்கள் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர்தான் இந்த அதிகாரப் பகிர்வு திட்ட ஆவணத்தை இந்திய அரசிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.