சரணடைந்த புலிகளை கொல்லுமாறு கோதாபய ஒருபோதும் உத்தரவிடவில்லைஅரசு உறுதியாக நிராகரிப்பு ஜெனரலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை


சரணடைந்த புலிகளின் தலைவர்களைக் கொல்லுமாறு அரசாங்கமோ அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவோ ஒருபோதும் உத்தரவிட்டிருக்கவில்லை என்று திட்டவட்டமாக நிராகரித்துள்ள அரசு எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா இது தொடர்பாகத் தெரிவித்திருந்தமைக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளது.
வடக்கில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களான புலித்தேவன், நடேசன்,ரமேஷ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை துரோகத் தனமானதெனக் கூறி முற்றாக மறுத்திருக்கும் அரசாங்கம், இவ்விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்
தெரிவித்துள்ளது.
ஜெனரல் பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியான "சன்டேலீடர்%27 பத்திரிகைக்கு வெளியிட்டிருக்கும் கருத்துத் தொடர்பிலேயே அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறது.தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் விளக்கமளித்த இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கோதபாய ராஜபக்ஷவே அவர்களைச் சுடுவதற்கு உத்தரவிட்டார் எனும் தலைப்பில் சன்டேலீடர் பத்திரிகையில் ஜெனரல் பொன்சேகாவை மேற்கோள்காட்டி பிரதான செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன், நடேசன் மற்றும் ரமேஷ் ஆகியோரை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவே உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா அந்தச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். அவர்களைச் சரணடைய அனுமதிக்க வேண்டாமென அப்போது 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு கோதபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாகவும் ஜெனரல் பொன்சேகா கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது, இச்சம்பவம் பற்றித் தான் பின்னரே அறிந்து கொண்டதாகவும் அத்துடன், யுத்தத்தின் இறுதி நாட்களில் தனக்குத் தகவல் தொடர்பாடல்கள் இருந்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.இந்தக் கருத்தின் மூலம் சரத் பொன்சேகா யுத்த களத்தில் தன்னுடன் செயற்பட்ட சக படையினருக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கூட துரோகமிழைத்துக் காட்டிக் கொடுத்து விட்டார். வரலாற்றில் இம் மாதிரியான துரோகத்தனமான சம்பவங்கள் இடம்பெற்றதற்கான பதிவுகள் இருக்கின்றன. ஒருவர் பலவீனமாக இருக்கும் போதும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகவுமே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
எவ்வாறிருப்பினும், கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா (ஓய்வு பெறுவதற்கு முன்) வெளியிட்ட கருத்துடன் ஒப்பிடும் போது இது முன்னுக்கு பின் முரணானதாக இருக்கிறது. உடை மாறும் போது பேச்சும் மாறும் என்பதன் வெளிப்பாடே இது.அதாவது, அம்பலாங்கொட நிகழ்வில் பேசிய சரத் பொன்சேகா, யுத்தத்தின் போது முடிவுகளை எடுப்பது களத்திலுள்ள படையினரே தவிர கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவர்கள் இல்லையென்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சகலரையும் அழித்ததனாலேயே தாங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றதாகவும் கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாது வெள்ளைக் கொடியுடன் சரணடையவரும் எவருக்கும் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று தங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும், அத்துடன் வெள்ளைக் கொடியுடன் வந்த எவரின் மீதும் தாக்குதல் நடத்தப்படவும் இல்லை என்றும் அவர் இந்த நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார்.எனவே, அம்பலாங்கொடையில் சரத் பொன்சேகா வெளியிட்ட இந்த கருத்துடன் ஒப்பிடும் போது அவர் தற்போது கூறியிருக்கும் தகவல்கள் முற்றிலும் முன்னுக்குப் பின் முரணானவை.
சரத் பொன்சேகா அம்பலாங்கொடையில் வெளியிட்ட இந்த கருத்தே இன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் அமெரிக்க காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கையில் போர் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கான ஆதாரமாகவும் அமைந்திருக்கிறது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக எதுவும் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், சரத் பொன்சேகாவின் இந்த செயற்பாடானது துரோகத் தனமானது, ஏனெனில் இந்த யுத்தத்தில் நாட்டை பாதுகாப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலான படையினர் உயிர்த்தியாகம் செய்திருக்கின்றனர். மேலும் பலர் அர்ப்பணிப்புகளை செய்திருக்கின்றனர்.
சரத் பொன்சேகா கூறுவதைப் பார்த்தால் சரணடைய வந்த பிரபாகரனின் பெற்றோர், 4 வைத்தியர்கள், தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் என எவருக்கும் தீங்கு விளைவிக்கப்படவில்லையே. 30 வருட கால யுத்தத்தின் பின்னரும் நாம் இன்னும் புதிய பல சவால்களுக்கும் தடங்கல்களுக்கும் முகங்கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னரும் அவர்களின் விசுவாசிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு இலங்கையில் ஸ்த்திரமின்மையை ஏற்படுத்தும் தந்திரோபாயங்கள் இன்னும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
தேர்தல் மற்றும் தனிப்பட்ட நோக்கத்திலான சரத் பொன்சேகாவின் இந்த கருத்தில் அரசாங்கம் மிகவும் கவலையடைந்துள்ளதுடன் ஏமாற்றம் அடைந்துள்ளது. எனினும் அவரின் இந்த குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக மறுக்கிறது. அது மட்டுமல்லாது கடந்த ஜூலை மாதம் தெரிவித்த கருத்தும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கருத்தும் முன்னுக்கு பின் முரணானதாக இருப்பது குறித்து விளக்கமளிக்குமாறும் நாம் சரத் பொன்சேகாவை கேட்கிறோம் என்றார்.
இதேநேரம், பாதுகாப்பு செயலாளர் தொடர்பாக சரத் பொன்சேகா இவ்வாறானதொரு பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் நிலையில இது தொடர்பாக எடுக்கப்படப் போகும் சட்ட நடவடிக்கை என்னவென கேள்வி எழுப்பப்பட்டபோதுஇந்த நாட்டில் சட்டம் இருக்கிறது. இவ்விடயத்தில் சில சட்டங்கள் மீறப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். இது தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை குறித்து ஆராயும். சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சமரசிங்க பதிலளித்தார்.
அத்துடன் சரத் பொன்சேகா எந்த ஆதாரமுமின்றி எம்மை நோக்கி விரல் நீட்டுகிறார். அவரது கருத்தில் பாரிய முரண்பாடு இருக்கிறது. எனவே, இதற்குப் பின்னணியில் மறைமுகமான கரங்களும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இருப்பது தெளிவாகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

No Response to "சரணடைந்த புலிகளை கொல்லுமாறு கோதாபய ஒருபோதும் உத்தரவிடவில்லைஅரசு உறுதியாக நிராகரிப்பு ஜெனரலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு ஆலோசனை"

Post a Comment