சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடியோக் காட்சிகள் உண்மையே

இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான விடியோக் காட்சிகள் மோசடி செய்யப்பட்டவை அல்ல என்று 'டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட விடியோக் காட்சிகளை உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், அவை உண்மையானவை என்பதை தமது குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது. 

முன்னதாக குறிப்பிட்ட அந்த விடியோக் காட்சிகள் போலியானவை என்றும், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'டைம்ஸ்' பத்திரிகை குறிப்பிட்ட விடியோ காட்சிகள் தொடர்பாக, 'கிரான் பெரடரிக்' என்ற விடியோக் காட்சிகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர் மூலமாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவின் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் கிரான், குறிப்பிட்ட விடியோ காட்சிகளில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த விடியோ காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாவோ வேறு விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தக் காட்சிகளை திட்டமிட்ட முறையில் நடிகர்கள் மூலமாக படம் பிடித்திருக்க முடியாது என்றும், துப்பாக்கி குண்டு துளைத்தவுடன் தலையில் இருந்த வெளியேறும் குருதி மற்றும் சுடப்ட்டவர்கள் விழும் முறை போன்றவை இயற்கையானவை என்றும், விடியோ மாற்றங்கள் மற்றும் ஒளிக்கலவைகளை இன்றி அவற்றை நிஜமானவை போன்று ஒருபோதும் படமாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிஜமாக ஒருவர் சுடப்பட்டு இறக்கும் போது ஏற்படும் அசைவுகளை நடிப்பில் வெளிப்படுத்தவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடியோ காட்சியானது நோக்கியா செல்போன் மூலமாகவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக அந்த விடியோ காட்சிகள் நூறு சதவீதம் உண்மையானது என்றும், இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் மாற்றுக் கருத்துகள் இன்றி நிஜமாகவே இடம்பெற்றிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக 'டைம்ஸ்' ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

'டைம்ஸ்' ஏட்டின் இந்த உறுதிப்படுத்துதலானது, இலங்கை அரசின் மீதான யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கான சர்வதேச குரலை மேலும் வலுப்படுத்தும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

No Response to "சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடியோக் காட்சிகள் உண்மையே"

Post a Comment