"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்கள் என உறுதியுடன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துதல், மற்றும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னெடுத்து வருகிறார்.
குடாநாட்டுடன் தென்பகுதியை இணைக்கும் ஏ-9 வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. யாழ். குடாநாட்டுக்கான ரயில் பாதைகளை அமைக்கும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீன்பிடி, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் நாம் உங்களுடன்தான் இருக்கிறோம். உங்களுக்கே எமது ஆதரவு என்பதை உணர்த்த வேண்டும். ஒரு வரலாற்றுத் தவறை மீண்டும் தமிழ் மக்கள் செய்துவிடக்கூடாது என வடக்கு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர். அவர் நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர். சரத் பொன்சேக்கா போன்றோர் முற்றிலுமாக இராணுவப் பின்னணியைக் கொண்டவர். இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்
வீரகேசரி இணையத்தளம்.
No Response to "வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதியையே ஆதரிக்க வேண்டும் : அமைச்சர் கருணா"
Post a Comment