மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல்(H1 N1) வைரஸ் நோயினால் பீடிக்கபட்ட முதலாவது நோயாளர் இனம் காணப்பட்டுள்ளார்.
சத்துருக்கொண்டானைச் சேர்ந்த கே.பாக்கிராஜா (வயது 45) என்ற குறித்த நோயாளி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளுடன் கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரது இரத்த மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்விற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை தொலைபேசி ஊடாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவன அறிக்கையில் இந்நபருக்கு பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் ஊழியர்களிடையே பரபரப்பான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார்.
முகக் கவசம் அணிந்து ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள போதிலும் ஏற்கனவே சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முகக் கவசம் போதுமானதாக இல்லை என்பதால் வைத்தியசாலை நிர்வாகம் சிரமங்களை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு சுகாதார அமைச்சர் நிமால் ஸ்ரீ பால டீ சில்வாவினால் திறந்து வைக்கப்பட்ட தொற்று நோய்களுக்கான தனியான வார்ட் பிரிவு தொடர்ந்தும் இயங்காத நிலையில் காணப்படுகின்றது.
20 படுக்கைகளுடன் கூடிய குறித்த வார்ட்டை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை ஊழியர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
கடந்த வாரம் திருகோணமலையில் இந்நோயினால் பீடிக்கப்பட்ட இராணுவ சிப்பாயொருவர் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(வீரகேசரி இணையத்தளம்)
No Response to "மட்டக்களப்பில் முதலாவது பன்றிக் காய்ச்சல் நோயாளி வைத்தியசாலையில் அனுமதி"
Post a Comment