ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வில் மேடையேறிய தேசத்துரோகிகளான மனோ கணேசன், ரவூப்ஹக்கீம் ஆகியோருடனும் தேசத்தைக் காட்டிக்கொடுத்த ரணில், மங்கள சமரவீரவுடனும் ஜெனரல் சரத் பொன்சேகா இணைந்து கொள்வது இன்னொரு துரோகச் செயலுக்காகவா எனவும் கேட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடு ஈட்டிய யுத்த வெற்றியை ஜெனரல் சரத் பொன்சேகா காட்டிக்கொடுக்க முற்படுவதாகவும் விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு சுமத்தினார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது "விரைவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் வெற்றியீட்டுவது உறுதிசெய்யப்பட்டதொன்றாகும். அவரது வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. பாரிய யுத்தத்தில் வெற்றியீட்டி நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி, அடுத்த நடவடிக்கையாக நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்து வறுமைக்கோட்டிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
இவ்வாறானதொரு நிலையில் இன்னுமொருதடவை ஜனநாயக வழியில் மக்களாணையை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி முன்வந்துள்ளார். அனைத்து ஜனநாயக சக்திகளும் அவரின் கரங்களைப் பலப்படுத்த முன்வந்துள்ளன. இந்த நிலையில்தான் மக்களால் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து சதித்திட்டத்தில் இறங்கியுள்ளன.ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரியாவார். அவரால் ஜனநாயக ஆட்சியை மேற்கொள்ள முடியாது. இந்த நாட்டுக்குத் துரோகமிழைத்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் போன்றோர் புலிகளின் பொங்குதமிழ் நிகழ்வில் ஒரே மேடையில் ஏறியவர்கள். இவர்களுடன் ஜே.வி.பி. தலைவர்களும் ஜெனரல் பொன்சேகாவும் எப்படி ஒன்றாக இணைந்து செயற்படப்போகின்றனர்.
ஜே.வி.பி.தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்தவர்களில் ஒருவராக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் ஜே.வி.பி.யினர் ஒரே மேடையில் தோன்றி மக்கள்முன் செல்லப்போகின்றனர். இவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் என்பன கிடையாதா எனக் கேட்கவிரும்புகின்றேன்
தினக்குரல்.
No Response to "ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா?"
Post a Comment