Wednesday 25 November 2009

பாபர் மசூதி இடிப்பிற்கு 68 பேர் பொறுப்பு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அரசு

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதற்கு 68 பேர் பொறுப்பு என்று நடவடிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தகர்க்கப்பட்ட பாபர் மசூதி குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் அளித்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையின் மீது நடந்த விவாதங்களி்ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் அரசு ஏற்கிறது என்றும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“லிபரான் ஆணையத்தின் எந்தப் பரிந்துரையையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. அனைத்துப் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரைகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று வீரப்ப மொய்லி கூறினார்.

இவ்வாறு கூறியது மட்டுமின்றி, “ விசாரணை ஆணையம் பரிந்துரைகளையும் தாண்டி அரசு செல்லும்” என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.

“பாபர் மசூதி இடிப்பு தொடர்பான உண்மைகளை விசாரணை ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அவைகள் மீது ஒவ்வொரு அமைச்சகமும் நடவடிக்கை எடுக்கும். அந்த அடிப்படையில் தான் நடவடிக்கை தொடர்பான விவர அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிய மொய்லி, “நடவடிக்கை அறிக்கையில் 68 பேர் பாபர் மசூதி இடிப்பிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளனர், அவர்கள் செய்த குற்றங்கள் என்ன என்பது குறித்தும் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளது, இவைகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்

No comments:

Post a Comment