அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 1,500 கி.மீ. தூர தரை இலக்குகளைத் தாக்கவல்ல இந்தியாவின் இடைத் தூர ஏவுகணையான அக்னி 2, நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் திட்டமிட்ட இலக்கை எட்டவில்லை என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Defense Research and Development organization - DRDO) தெரிவித்துள்ளது.
ஒரிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தின் கடற்பகுதியில் உள்ள வீலர் தீவிலிருந்து நேற்று இரவு 7.50 மணிக்கு அக்னி 2 ஏவுகணை செலுத்தப்பட்டது. தளத்திலிருந்து புறப்பாடும், பிறகு முதல் கட்டப் பிரிதலும் சரியாக நடந்ததென்றும், இரண்டாம் கட்டம் பிரிவதற்கு முன்னர் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் இருந்து அக்னி ஏவுகணை தடம் மாறியது என்றும், இதனால் எதிர்பார்த்த முடிவுகளை அது தரவில்லை என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
அக்னி 2 ஏவுகணை, அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, 1,500 கி.மீ. தூரத்திற்குட்பட்ட தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கியழிக்கவல்லதாகும். பல சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் அது இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நேற்றுதான் முதல் முறையாக இரவுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment