Tuesday, 15 December 2009

இந்தியாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே பொன்சேகா பதவி நீக்கம்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பேரிலேயே, இலங்கை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை, அந்தப் பதவியிலிருந்து அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியேற்றியதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் 'நேசன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாதக சூழ்நிலைகள் தோன்றியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவின் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றுமாறு மன்மோகன் சிங்,ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியதாகவும், அதன் அடிப்படையிலேயே பொன்சேகா பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவும் அப்பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து பொன்சேகா, இலங்கை இராணுவத்தினர் மத்தியில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்ததாகவும், இந்த நிலையானது இலங்கையில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்தி விடும் என்று கொழும்பில் உள்ள 'ரா' அதிகாரிகள் மூலம் இந்திய பிரதமருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்தே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை போன்று இலங்கையிலும் இராணுவ ஆட்சி ஏற்படலாம் என்று மன்மோகன் சிங், ராஜபக்சவை எச்சரித்துள்ளார்.

மேலும் இராணுவத்தின் உயர் நிலை தளபதிகளை உடனடியாக இடமாற்றுமாறும், அதிகளவு பலம் பொருந்தியவராக மாறியுள்ள பொன்சோகவிற்கு அதிகாரங்கள் அற்ற பதவி ஒன்றை வழங்குமாறும் மன்மோகன் சிங், அப்போது ஆலோசனை வழங்கியுள்ளார். 

அத்துடன் யுத்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரது உத்தரவுகள் பலவற்றை நிறைவேற்ற பொன்சேகா தவறியதாகவும், அந்த உத்தரவுகள் இந்தியாவின் ஆலோசனையின் பேரிலேயே பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் இந்த தன்னிச்சையான செயல்பாடுகளால்தான் யுத்த களத்தில் இந்தியா விரும்பிய சில முக்கிய நிகழ்வுகள் இடம்பெறாமல் போய்விட்டதாகவும், அதனால் பொன்சேகா மீது இந்தியாவிற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment