Thursday 26 November 2009

ஜெனரல் சரத்பொன் சேகாவை ஆதரிப்பதென ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு தீர்மானம்

ஜனாபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடவிருக்கும் ஜெனரல் சரத்பொன் சேகாவை ஆதரிப்பதென ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு தீர்மானித்திருப்பதாக தெரிவித்த கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலை கட்சி குடும்பஆட்சியை ஒழிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே எதிர்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். எதிரணிகள் எடுத்திருக்கும் இந்த முடிவு "மெதமுலன%27 அதிகாரத்தை உலுக்கியிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய செயற்குழுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை கட்சித்தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கும் கூடுதலான நேரம் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஸ்ரீ கொத்தாவில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார்.



கட்சியின் யாப்பு விதிகளுக்கமைய தற்போதைய நிலைமைகளை செயற்குழு ஆராய்ந்த பின்னரே பொதுவேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் நாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் சரத்பொன்சேகாவை வெற்றியடையச் செய்ய பாடுபடுமாறு அறிவுறுத்தத் தீர்மானிக்கப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து பேசுகையில் நாட்டில் மக்களாட்சியை மலரச்செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கையை ஐக்கிய தேசியக்கட்சி இன்று எடுத்திருக்கின்றது. ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வந்து மக்களாணையின் மூலம் மக்களரசாங்கத்தைத் தோற்றுவிப்பதற்கான ஆரம்பமே இது. இந்தத் தேர்தலை ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதித் தேர்தலாகப் பார்க்கவில்லை.அராஜக ஆட்சிஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சர்வஜன வாக்கெடுப்பாகவே இதனை நோக்குகின்றோம். இத்தேர்தலில்பொது வேட்பாளராக போட்டியிட முன்வந்திருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கியதேசியக்கட்சியும் ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மெதமுலன அதிகாரம் வீழ்த்தப்பட்டுவிடும் .


கட்சியாப்பின் 3.3(ஏ) பிரிவுக்கு அமையவே ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முடிவுசெய்யப்பட்டதாக கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி இன்று முதல் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவதை உறுதிசெய்யும் வகையில் கட்சி தேசிய,மாவட்ட தொகுதி பிரதேச கிளைகள் மட்டத்தில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் செயற்குழு கட்சித்தலைமைக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாகவும் பிரதித்தலைவர் கருஜயசூரியவுடன் இணைந்து செயற்படுமாறு கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.


முக்கியமானதொரு காலகட்டத்தில் பொருத்தமான முடிவையே கட்சி எடுத்துள்ளது. ஜனநாயகத்தைப்பாதுகாப்பதே கட்சியின் முதற்கடமையாகவுள்ளது. குடும்ப அதிகாரத்தை முடிவுக்குக்கொண்டுவரும் பாரிய பொறுப்பை நாம் ஜெனரல் பொன்சேகாவிடம் ஒப்படைத்துள்ளோம். ஜனநாயகத்தை மீட்டுத்தருவது அவரது கடப்பாடாகும். அதற்குப்பின்னர் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கான பாராளுமன்றத் தேர்தலை நடத்துவோம். அதில் வெற்றியீட்டிய பின்னர் நாம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவிருக்கின்றோம்.
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு முக்கிய பிரச்சினை இருப்பதை அடையாளம் கண்டகட்சி ஐக்கியதேசியக்கட்சியே ஆகும். இன்று அதிகாரத்திலுள்ளவர்கள் தமிழருக்கு பிரச்சினைகள் இல்லை என்று சொன்னதை மறந்துவிடமுடியாது. இன்றும் கூட வடக்கில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதே உண்மையாகும். சட்டத்திற்கு முரணாகவே இவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.


மக்களால் தெரிவு செய்யப்படாத பசில் ராஜபக்ஷவுக்கு மக்கள் பிரச்சினை எங்கே தெரியப்போகிறது.தமிழ் மக்களின் உரிமை பற்றிப் பேசிய எனக்கு அன்றுமுதல் சிங்கள இன விரோதி தேசத்துரோகி என்றெல்லாம் பழி சுமத்தி வருகின்றனர். தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், அனைவருக்கும் சிங்கள மக்களுக்கு இருக்கும் உரிமை இருக்கவேண்டும். அதனைப்பெற்றுக்கொடுப்பதில் நான் என்றும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறேன்.


தான் வெற்றியீட்டினால் தாமதமின்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா எம்மிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், பதவியேற்று 48 மணி நேரத்துக்குள் அவசரகாலச்சட்டம் ரத்துச்செய்யப்படுமெனவும் உறுதியளித்தார்.அதேநேரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசின் கீழ் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர் இணக்கம் தெரிவித்திருக்கின்றார் என்றும் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
(தினக்குரல்)

No comments:

Post a Comment