Thursday, 26 November 2009

அயல்நாட்டு தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்தா உட்பட மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் தென்கொரியா நாட்டு தூதுவர்கள் நேற்று யாழ்குடாநாட்டிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், இவர்களின் இந்த திடீர் விஜயம் யாழ். மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளன. 

இரண்டு நாள் பயணமாக இங்கு வந்த இந்திய தூதுவர் அசோக் கே காந்தா, பலாலி விமான நிலையத்தில் இறங்கியதும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.அதன் பின்னர் அவர் யாழ் நகருக்குச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து, இவர் யாழ் செயலகத்துக்கு சென்று அரசு அலுவலர்களுடன் சந்திப்பை முடித்துக்கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கும், யாழ் மாநகரசபைக்கும் விஜயம் செய்தார். 

பின்னர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு சென்று துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டதாக யாழ் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ்குடாநாட்டில் உள்ள பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே யாழ்ப்பாணம் வந்த மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் தென்கொரிய நாட்டு தூதுவர்கள் முதலில் யாழ் பொது நூலகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் பல அரசு அதிகாரிகளையும் சந்தித்தனர். 

இந்தியாவும், மலேசியாவும் ஏற்கனவே தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவுகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், இவர்களின் யாழ் விஜயம் பல துறைகளில் முதலீடு செய்வதற்கான ஆய்வு என்கின்றபோதும், அ திபர் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணங்கள் யாழ் மக்களிடம் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment